இந்தியா

செல்போன் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்த டாக்டர்கள்: பீகாரில் அதிர்ச்சி

ச. முத்துகிருஷ்ணன்

பீகாரில் மருத்துவமனை ஒன்றில் மின்சாரம் இல்லாததால், மருத்துவர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். சசாராம் (Sasaram) மாவட்டத்தில் சதார் (Sadar) மருத்துவமனையில் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் அடிக்கடி மின்விநியோகம் தடைப்படுவதாகவும், அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனவும் மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரும் உடனடியாக ஸ்டார்ட் ஆகவில்லை. இந்நிலையில் கர்சேருவா பகுதியைச் சேர்ந்த ரிங்குகுமாரி (22) என்பவருக்கு டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஜெனரேட்டர் ஆபரேட்டர் உடனடியாக ஜெனரேட்டரை இயக்காததால் டார்ச் உதவியுடன் சிகிச்சையை தொடர்ந்ததாக தெரிவித்தனர்.

இதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் தவறு இல்லை என்று கூறிய டாக்டர், சிறிது நேரம் கழித்து ஜெனரேட்டர் இயக்கப்பட்டதாக தெரிவித்தார். மின்சாரம் இல்லாத நிலையில் சதர் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

சதர் மருத்துவமனையின் டாக்டர் பிரிஜேஷ் குனார், மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் வெளிச்சம் இல்லாத நிலையில் வேறு வழியின்றி டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக கூறினார். "இங்கே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அடிக்கடி இது நிகழ்கிறது. என்ன பிரச்னை என்று தெரியவில்லை. நாங்கள் இப்பிரச்சனைகளை அடிக்கடி எதிர்கொள்கிறோம்" என்று டாக்டர் குனார் கூறினார்.