உலகிலேயே அதிக பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய விழா பிப்.26 ஒன்று நிறைவுபெற்றது.
இங்கு, கடந்த 6 ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக, பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) தீவிரவாதி லஜர் மசி (29) என்பவர் கவுஷாம்பி நகரில் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தின. அதில், அவரிடமிருந்து முக்கிய தகவல்கள் பல கிடைக்கப்பெற்றன.
கைது செய்யப்பட்ட நபர், லஜர் மாசிஹ் அமிர்தசரஸின் குர்லியன் கிராமத்தைச் சேர்ந்தவர். ஜெர்மனியை தளமாகக் கொண்ட இவர் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) தொகுதியின் தலைவரான ஸ்வர்ன் சிங் என்கிற ஜீவன் ஃபௌஜியிடம் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாகிஸ்தானின் உளவு (ஐஎஸ்ஐ) அமைப்புடனும் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், “ பாகிஸ்தான் எல்லையிலிருந்து ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்குள் ஆயுதங்களை கடத்தினால் நிறைய பணம் தருவதாக ஐஎஸ்ஐ சார்பில் இவருக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் பஞ்சாபில் கைது செய்யப்பட்ட மசி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்கிருந்து தப்பி உள்ளார். பின்னர் உ.பி.க்கு வந்த மசி, ஐஎஸ்ஐ அமைப்பினரின் உத்தரவுப்படி கும்பமேளாவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலை நடத்திய பிறகு போர்ச்சுகல் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் அங்கு சிறந்த வாழ்க்கை அமைத்து தரப்படும் என்றும் ஐஎஸ்ஐ அமைப்பினர் உறுதி அளித்ததாக மசி தெரிவித்துள்ளார். ஆனால், பாதுகாப்புப் படையினரின் கெடுபிடியால் அவருடைய திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. அத்துடன் அவரை கைது செய்து விட்டோம். ” என்று தெரிவித்துள்ளனர்.