சிவசேனா தலைவர் நடைபாதையின் ஒரு பகுதியை ரூ.3 லட்சத்திற்கு மோசடியாக விற்றதாக பானி பூரி விற்பனையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் உள்ளனர். இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா தலைவர் ஒருவர், மும்பை நடைபாதையின் ஒரு பகுதியை பானி பூரி வியாபாரியிடம் ரூ.3 லட்சத்திற்கு மோசடியாக விற்பது பேசுபொருளாகி உள்ளது.
பானி பூரி விற்பனை செய்து வருபவர் சந்தோஷ் பச்சுலால் குப்தா. இவரிடம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சேனா பிரிவின் முலுண்டைச் சேர்ந்த தலைவரான அவினாஷ் பாகுல் என்பவர், கடந்த 2023ஆம் ஆண்டு, பாகுல் பொது நடைபாதையின் ஒரு பகுதியை விற்றதாகக் கூறப்படுகிறது. இதற்காக, சந்தோஷ் பச்சுலால் குப்தா ரூ.50,000 தொகையை ரொக்கமாக அவினாஷ் பாகுலிடம் வழங்கியதாகவும், மீதித் தொகையான ரூ.2.5 லட்சத்தை ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தியதாகவும் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகையை தாயின் நகைககளை அடகு வைத்தும், வங்கிக் கடன் மூலமும் பெற்றுக் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இரண்டு வருடங்கள் ஆகியும் தனக்கு அந்த இடம் வழங்கப்படாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குப்தா, அதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்துள்ளார். அப்போதுதான் அவருக்கு உண்மையான விவரமே தெரிய வந்துள்ளது. ஆம், அது, பிரஹன் மும்பை நகராட்சிக்கு (பிஎம்சி) சொந்தமானது என்றும், அது விற்பனைக்கானது அல்ல எனவும் தெரிய வந்துள்ளது. இதனால், தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதைத் தெரிந்துகொண்ட குப்தா, அதன்பிறகு அவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் இல்லை.
இதையடுத்து, போலீஸாரிடம் குப்தா புகார் அளித்துள்ளார். காவல்துறை தலையீட்டிற்குப் பிறகு, குப்தாவிடம் தலா ரூ.1.5 லட்சத்திற்கான இரண்டு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இரண்டும் பவுன்ஸ் ஆகிவிட்டதால் குப்தா நீதிமன்றத்தை நாட முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர், கட்சி தலைமையிடமும் முறையிட்டுள்ளார். இதுகுறித்து உள்ளூர் சிவசேனா தலைவர் விபாக் பிரமுக் ஜெகதீஷ் ஷெட்டி, ”கட்சிக்கு இந்த விஷயம் தெரியும். விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கட்சி என்னிடம் கேட்டுக் கொண்டுள்ளது. யாருக்கும் எந்த அநீதியும் செய்யப்படக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, அவினாஷ் பாகுல் குப்தா தன்மீது வைத்திருக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மேலும், “எனக்கும் குப்தாவுக்கும் இடையே விற்பனை ஒப்பந்தம் எதுவும் இல்லை. அவர் எனக்கு வணிகத்திற்காக கடன் கொடுத்தார், அதை நான் ஏற்கெனவே ரொக்கமாக திருப்பிச் செலுத்திவிட்டேன். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இவர், தோசை விற்பனையாளர் ஒருவர் சட்டவிரோதமாக இடத்தை வாடகைக்கு எடுத்திருந்த நிலையில், அவரிடமிருந்து மாதம் ரூ.17,000 வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.