இந்தியா

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் உத்தவ் தாக்ரே சந்திப்பு

webteam

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களை சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே ஓட்டலில் சந்தித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக நேற்று பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஆகவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் மும்பையிலுள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ஓட்டலில் தங்கியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களை சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்ரே ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது உத்தவ் தாக்ரே,“நீங்கள் கவலைப் பட தேவையில்லை. நமது கூட்டணி நீண்ட காலம் நீடித்து இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் இவர்கள் இருவரும் சரத் பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலேவையும் சந்தித்தனர். 

இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்ரே சிவசேனா எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள லலித் ஓட்டலுக்கு சென்றுள்ளார். இதனிடையே சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.