மத்தியப் பிரதேச மாநிலம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மாநிலத்தின் அமைதிக்காக மேற்கொண்ட 28 மணி நேர உண்ணாவிரதத்தை அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் இன்று பிற்பகலில் நிறைவு செய்தார்.
வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் கடந்த மாதம் முதல் தேதியிலிருந்து போராடி வருகின்றனர். ஐந்து நாட்களுக்கு முன் மந்த்சார் மாவட்டம் பிபாலியமண்டியில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் உருவானது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மந்த்சார் பகுதியில் பதட்டம் நீடித்த நிலையில், ஏராளமான போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
விவசாயிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் வன்முறையாக மாறியிருந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, அமைதி வழிக்கு திரும்பக் கோரி அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினார். இதற்காக, போபால் நகரில் உள்ள தசரா மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. சவுகானுடன் சேர்ந்து மாநிலத்தின் மற்ற அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும், கட்சித்தொண்டர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரத மேடையிலேயே சவுகான் அரசுப்பணிகளை கவனித்து வந்தார். மேலும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிவராஜ்சிங் சவுகான் அளித்த உறுதிமொழியை அம்மாநிலத்தில் உள்ள பிரதான விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு விவசாய சங்கப் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கையை ஏற்று, நேற்று தொடங்கிய தனது உண்ணாவிரதத்தை 28 மணி நேரத்திற்கு பின்னர் இன்று பிற்பகல் நிறைவு செய்தார்.