இந்தியா

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு செப்.13 வரை காவல்...!

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு செப்.13 வரை காவல்...!

webteam

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை செப்டம்பர் 13 ஆம் தேதி காவலில் வைத்து விசாரிப்பதற்கு அமலாக்கத்துறைக்கு, டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சிவக்குமார் கர்நாடக அமைச்சராக இருந்த போது அவரின் டெல்லி வீடு மற்றும் கர்நாடகாவிலுள்ள அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகள் என 84 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. டெல்லியில் உள்ள சிவக்குமாரின் வீட்டிலிருந்து 8.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் ஹவாலா பணம் என அமலாக்கப் பிரிவு போலீசார் உறுதி செய்திருந்தனர். 

இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து சிவக்குமார் தொடர்ந்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை விசாரணைக்கு சிவக்குமார் ஆஜரானார். 5 நாட்களுக்குப் பிறகு, அவர் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டார். 

சிவக்குமாரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தப்படுகிறது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவக்குமாருக்கு 14 நாட்கள் காவல் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை வாதிட்டது. எனினும், அவரை செப்டம்பர் 13 ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிப்பதற்கு, சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.