இந்தியா

“சிவசேனா பவனை இடிப்பீர்களா?” : பாஜக தலைவரின் கருத்துக்கு சிவசேனா கண்டனம்

Veeramani

சிவசேனா பவனை இடிப்பதாக, பாஜக தலைவர் பிரசாத் லாட் கூறியதற்கு எதிராக சிவசேனா கட்சி, பாரதிய ஜனதாவை கடுமையாக விமர்சித்துள்ளது.

சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாமனாவில், "மகாராஷ்டிராவில் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தின் காரணமாக பிஜேபிக்கு முடிவு நெருங்கிவிட்டது. சிவசேனா பவனை யாரேனும் இகழ்ச்சியாகப் பார்த்தால், அவர்களின் தலைவர்களும், அவர்களுடைய கட்சியும் வோர்லி சாக்கடையில் அடித்துச் செல்லப்படுவார்கள்.  'சிவசேனா பவன் இடிக்கப்படும்' என பாஜகவினர் பேசும்போது அதற்கு மராத்தி தலைவர்கள் கைதட்டுவது என்பது, மராத்தி பெருமைக்கு துரோகம் இழைக்கும் செயல் ஆகும்" என தெரிவித்துள்ளது

மேலும், “சிவசேனாவுடன் அரசியல் வேறுபாடுகள் உள்ள பலர், அவ்வப்போது சிவசேனாவுக்கு எதிராக சவால் விட்டனர். ஆனால் சிவசேனா அந்த சவால்களை எதிர்கொண்டது, இருப்பினும், அந்த அரசியல் எதிரிகள் சிவசேனா பவனை இடிப்பது பற்றி பேசவில்லை. சிவசேனா பவனில் பால் தாக்கரே மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை உள்ளது. அவரது காவி கொடி பவனில் ஏற்றப்பட்டுள்ளது. இது சிலரைத் தொந்தரவு செய்கிறது, அதனால்தான் சிவசேனா பவனை இடிப்போம் என கூறியுள்ளனர் " என்று சாமனாவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தனது கருத்திற்காக மன்னிப்பு கோரியுள்ள மகாராஷ்டிரா பாஜக தலைவர் பிரசாத் லாட் , "நேற்று எங்கள் அலுவலகம் மாஹிமில் திறக்கப்பட்டது. பல போலீஸ் அதிகாரிகளிடமிருந்து எனக்கு போன் அழைப்புகள் வந்தன, நிதேஷ் ரானேவும் நானும் அங்கு செல்லக்கூடாது, பேரணியை நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. நாங்கள் தாதர்-மாஹிமுக்கு வரும்போது, சிவசேனா பவனைத் தாக்கப் போவது போல் இவ்வளவு பெரிய போலீஸ் பாதுகாப்பு இங்கு ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருந்தேன். அந்த அறிக்கைக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்று அவர் கூறினார்.