இந்தியா

“தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்” - சிவசேனா தாக்கு

webteam

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை மிகவும் ஆரம்ப நிலையில் இருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப்ரித்விராஜ் சவான் கூறியுள்ளார். இதற்கிடையில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்‌பட்டது திட்டமிட்ட நாடகம் என சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் முடிவு வந்து 19 நாட்கள் ஆகியும் யாரும் ஆட்சி அமைக்காததால் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள்‌ தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, பின்னர் ஒன்றிணைத்து அதிகாரப் பகிர்வு மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்கியதாக ப்ரித்விராஜ் சவான் தெரிவித்தார். ஆகவே இன்று இரண்டு கட்சிகளுக்கிடையில் மீண்டும் ஆலோசனை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அதன் பின்னர் இரண்டு கட்சிகளும் இணைந்து சிவசேனாவுடன் ஆலோசனை‌ நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா ‌கடுமையாக விமர்சித்துள்ளது. குடி‌யரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது திட்டமிட்ட நாடகம் என்று கூறியுள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும், மாநிலத்தின் ஆட்சி மறைமுகமாக பாஜகவிடம்தான் இருப்பதாகவும் கூறியுள்ளது‌.