தங்களுடைய எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிப்பதாக பாஜக மீது சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா - சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. இதில் பாரதிய ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி கண்டன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற சூழலில் 161 இடங்களை வென்றுள்ள பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி எளிதில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அந்தக்கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது? ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது. சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இதற்கிடையே, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்கவும் சிவசேனா முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. தொடக்கத்தில், பாஜக உடன் மத்தியில் இருக்கும் கூட்டணியில் இருந்து வெளியேறினால் கூட்டணி அமைக்க தயார் என சரத்பவார் தெரிவித்து இருந்தார்.
ஆனால், நேற்று சிவசேனா எம்பியும் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ராவத் சந்திப்புக்கு பின்னர் பேசிய சரத்பவார், கூட்டணி இல்லை என்பதுபோல் தெரிவித்துவிட்டார். அதாவது, ஆட்சி அமைக்க பாஜக - சிவசேனா கூட்டணிக்கே மக்கள் பெரும்பான்மை அளித்துள்ளதாகவும், தங்களை எதிர்க்கட்சியாக செயல்படவே மக்கள் வாய்ப்பளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துவிட்டார். அதனால், பாஜகவையே மீண்டும் நாட வேண்டிய நிலையில் சிவசேனா உள்ளது.
இத்தகைய சூழலில், தங்களுடைய கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா பகிரங்கமாகk குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வரவேண்டும் என மகாராஷ்டிரா மக்கள் விரும்புகின்றனர். சிலர் பணத்தை வைத்துக் கொண்டு சிவசேனா எம்.எல்.ஏக்களை இழுத்து வெற்றிபெற முயல்கிறார்கள்.
இதுபோன்ற மதிப்பற்ற அரசியலை மகாராஷ்டிராவில் சிவசேனா அனுமதிக்காது. முந்தைய அரசு பணத்தைக் கொண்டு புதிய அரசை அமைக்க முயற்சிக்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு உதவுவதில்லை. அதனால்தான், சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதலமைச்சர் ஆக வேண்டுமென விவசாயிகள் விரும்புகின்றனர்” என்று நேரடியாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சியின் சச்சின் சவட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சிவசேனா கட்சி பாஜகவுடனும், மகாயுதி கூட்டணியிலும் இடம்பெற்றுள்ளது. தங்களுடைய எம்.எல்.ஏக்களை பாஜக இழுத்துச் சென்றுவிடும் என சிவசேனாவே அச்சப்படுகிறது என்றால் பாஜக எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களிடம் இருந்து மகாராஷ்டிராவை ஏன் காப்பாற்றக் கூடாது?. மகாயுதி கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தார்மீக ரீதியில் உரிமை இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே, ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநரை இன்று சந்திக்கிறது பாஜக.