இமாச்சலப் பிரதேசத்தில் நிலவிவரும் பனிப்பொழிவை அப்பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் ரசித்து அனுபவித்து வருகின்றனர்.
கோடைகாலப் புகலிடம் மற்றும் மலைகளின் ராணி என்று அறியப்படும் சிம்லா தற்போது ஜில்லென்ற பனிப்பொழிவுடன் காட்சியக்கிறது. மணாலி, குஃப்ரி, டல்ஹவுசி உள்ளிட்ட இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியசாக இருக்கிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளிமலை போன்று கண்களுக்கு விருந்தளிக்கிறது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் லாஹோல், ஸ்பிட்டி மாவட்டங்களில் பூஜ்யம் டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சிம்லாவிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குர்பி மலைநகரம் பனிப்பொழிவின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. குர்ஃபி பகுதியிலுள்ள ஐஸ் ஸ்கேட்டிங் தளத்தில் விளையாட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். செயற்கையாக உருவாக்கப்பட்ட ஐஸ் ஸ்கேட்டிங் மைதானத்தில் புதுமணத் தம்பதிகள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் விளையாடி மகிழ்கின்றனர்.
குலுவிலுள்ள பிரசித்தி பெற்ற பிஜிலி மகாதேவ் சிவாலயத்தில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. ஆலயத்திலிருக்கும் லிங்கம் பனிப்பொழிவில் மூழ்கிவருகிறது.
இமாச்சலின் அண்டை மாநிலமான உத்தராகண்ட்டிலும் பனிப்பொழிவு அதிகரித்திருப்பதால், பிரசித்தி பெற்ற கேதார்நாத் சிவன் கோயில் பனிப் போர்வை போர்த்தி காட்சியளிக்கிறது. இமயமலைப் பகுதியில் அமைந்திருக்கும் கேதார்நாத் சோட்டா சார்தாம், யாத்திரை செல்லும் கோயில்களில் மிக முக்கியமான தலமாகும். குளிர்காலம் என்பதால், இந்தக் கோயில் நடை ஆறு மாதங்களுக்கு அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அங்கு பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது