இந்தியா

பாஜக சீட் ஒதுக்கவில்லை: காங்கிரஸில் இணைகிறார் சத்ருகன் சின்கா

பாஜக சீட் ஒதுக்கவில்லை: காங்கிரஸில் இணைகிறார் சத்ருகன் சின்கா

webteam

பாஜகவை விமர்சித்து வரும் நடிகரும் அந்தக் கட்சியின் எம்.பியுமான சத்ருகன் சின்கா, காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்கா. பீகார் மாநிலம், பாட்னா தொகுதி பா.ஜ. எம்.பி.யான அவர், பிரதமர் மோடியையும், கட்சி தலை மையையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலும் பங்கேற் றார். சமீபத்தில், ‘மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான சரியான நேரம் வந்தாகி விட்டது; புதிய தலைமை வரவேண்டும் என்று நினைக்கவில்லை யா?’ என்று கேட்டிருந்தார். 

இந்நிலையில், தொடர்ந்து பாஜக தலைமையை விமர்சித்து வரும் அவரை கழற்றிவிட அந்தக் கட்சி முடிவு செய்தது. பாராளுமன்றத் தேர்தலில் அவரது பாட்னா தொகுதியில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை களமிறக்க பாஜக திட்டமிட்டது. ரவிசங்கர் பிரசாத், இப்போது பீகார் மாநில மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். 

(ரவிசங்கர் பிரசாத்)

இந்நிலையில் பீகார் வேட்பாளர் பட்டியலை பாஜக கூட்டணி இன்று வெளியிட்டது. அதில் எதிர்பார்த்ததை போலவே, சத்ருகன் சின்காவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் தொகுதி ரவிசங்கர் பிரசாத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சின்கா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். நாளையோ, நாளை மறுநாளோ அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.