இந்தியா

“பாஜகவை விட்டு விலக ஒரே இரவில் நான் முடிவெடுக்கவில்லை” - சத்ருகன் சின்ஹா

webteam

பாஜகவை விட்டு வெளியேற நான் ஒரே இரவில் முடிவுசெய்யவில்லை என காங்கிரஸில் இணைந்த சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பீகார் மாநிலம், பாட்னா தொகுதி பா.ஜ.க எம்.பி.யான சத்ருகன் சின்கா, பிரதமர் மோடியையும், கட்சி தலைமையையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதையடுத்து அவரை கழற்றிவிட்ட பாஜக, அவரது பாட்னா தொகுதியில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை வேட்பாளராக அறிவித்தது. இதையடுத்து சின்கா காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனக் கூறப்பட்டது. 

இந்நிலையில் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் முறைப்படி, இன்று இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ரன்தீப் சுர்ஜ்வாலா ஆகியோர் முன்னிலையில் அவர் சேர்ந்தார்.

பின்னர் செய்தியாளருக்குப் பேட்டியளித்த சத்ருகன் சின்ஹா, “நான் ஒரே இரவில் பாஜகவை விட்டு வெளியேற வேண்டும் என நினைக்கவில்லை. நான் 25 வருடங்களாக அக்கட்சியில் இருந்துள்ளேன். இந்த ஆட்சி ‘ஒரு நபர் ஷோ’ மற்றும் இருநபர் ராணுவம் போல செயல்படுவதை பார்த்திருக்கிறேன். இது சர்வாதிகாரமாக இருந்தது. 

நிறைய திறமையானவர்கள் பாஜக அரசின் கீழ் வேலை செய்கின்றனர். நான் பாஜகவை விட்டு விலகமாட்டேன், வேண்டுமானால் நீங்கள் என்னை கட்சியில் இருந்து நீக்கி கொள்ளுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்கள் செய்யவில்லை. அதற்கு குற்ற உணர்வும் அவமானமும் காரணமாக இருக்கலாம். எனவே நானே காங்கிரஸில் சேருவது என்று முடிவெடுத்தேன்.” எனத் தெரிவித்தார்.