இந்தியா

பிரதமர் பயன்படுத்தும் ‘ஓ மித்ரோன்’ வார்த்தை - ஒமைக்ரானோடு ஒப்பீட்டு சூசகமாக சாடிய சசிதரூர்

சங்கீதா

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி பயன்படுத்தும் ‘ஒ மித்ரோன்’ வார்த்தையை, ஒமைக்ரானோடு ஒப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மறைமுகமாக சாடி ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சின்போது எப்போதும் நாட்டு மக்களை, நண்பர்களே (ஓ மித்ரோன்) என்று அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மித்ரோன் என்றால் இந்தி மொழியில் நண்பர்களே என அர்த்தம். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், கேரள மாநில திருவனந்தபுரம் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர், தற்போது இந்த ‘ஓ மித்ரோன்’ சொல்குறித்து மறைமுகமாக பதிந்துள்ள ட்வீட் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ஒமைக்ரானைவிட மிகவும் கொடியது 'ஓ மித்ரோன்' (“O Mitron”). நாங்கள் 'ஓ மித்ரோன்' விளைவை அன்றாடம் சந்தித்து வருகிறோம். அதிகரிக்கும் பிரிவினைவாதம், வெறுப்புப் பிரச்சாரங்கள், மதவெறி, நாட்டின் அரசியல் சாசனத்தின் மீதான தீய தாக்குதல் மற்றும் வலுவிழக்கும் ஜனநாயகம் ஆகியன இதன் அளவுகோலாக இருக்கின்றன. இந்த வைரஸை பொறுத்தவரை லேசான உருமாறிய வைரஸ் என்றெல்லாம் பாகுபாடே இல்லை” என்று கூறியுள்ளார்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் களங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பா.ஜ.க.வை விமர்சிக்கும் வகையில், சசிதரூர் இதுபோன்ற விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

கடந்த ஜனவரி 29-ம் தேதி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீடியோவைப் பகிர்ந்து, “இந்த தேசமே ஓர் சுடுகாடாக மாற்றப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.

அதற்கு முன்னதாக பிரதமர் மோடி எல்லா மேடைகளிலும் காங்கிரஸ் முக்த் பாரத் (‘Congress mukt Bharat’ ) அதாவது காங்கிரஸே இல்லாத பாரதம் என முழங்கி வர, சசிதரூரோ ஜனவரி 26-ம் தேதி பதிவிட்ட ட்வீட்டில் , பா.ஜ.க. “Congress-yukt BJP (Congress (leaders)-laden BJP)”, காங்கிரஸ் தலைவர்களால் ஆன கட்சி என்று விமர்சித்தார்.

சசிதரூரின், மோடி குறித்த ட்வீட் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சேஷாத் பூனாவாலா, "நாட்டின் கொரோனா நிலவரத்தை எள்ளி நகையாடும் விதமாக சசிதரூர் பேசியுள்ளார். அவருடைய கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, எப்போதும் கொரோனா பற்றி பெரிதாகப் பேசி வருகிறார். ஆனால், இவரோ நிலைமையை நகைப்புக்குரியதாக ஆக்கியுள்ளார்" என்று காட்டமாக கூறியுள்ளார்.