இந்தியா

வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட கேரள மீனவர்களுக்கு நோபல் பரிசு - சசி தரூர் கோரிக்கை

வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்ட கேரள மீனவர்களுக்கு நோபல் பரிசு - சசி தரூர் கோரிக்கை

Rasus

கேரள வெள்ளத்தின்போது தன்னலமில்லாமல் மீட்பு நடவடிக்கையில் துரித கதியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு நோபல் பரிசு வழங்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர் கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கின. மக்கள்  உண்ண உணவின்றி தவித்தனர். அண்டை மாநிலங்களில் இருந்து வண்டி வண்டியாய் நிவாரணப் பொருட்கள் சென்று இறங்கியது. நிவாரணப் பணிகளில் தேசிய மீட்புப் படையினர், போலீசார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு பக்க பலமாய் பல இடங்களில் நின்றது மீனவர்கள் தான். அதுமட்டுமில்லாமல் பல இடங்களில் மீனவர்கள் குழுக்களாய் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்த மக்களை படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர். தங்கள் முழு வாழ்வாதரமாக விளங்கும் படகுகளை பல மீனவர்கள் வெள்ளத்திற்கு பறிகொடுத்த போதிலும், தன்னலம் கருதாமல் மீட்புப் பணிகளில் முழு வீச்சாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் கேரள வெள்ளத்தின்போது தன்னலமில்லாமல் மீட்பு நடவடிக்கையில் துரித கதியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு நோபல் பரிசு வழங்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக நார்வே நாட்டைச் சேர்ந்த நோபல் கமிட்டிக்கு சசிதரூர் கடிதம் எழுதியுள்ளார். அதில் வெள்ளத்தின்போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சக மக்களை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளத்தின்போது வயதான ஒருவரை படகில் ஏற்றுவதற்காக ஒருவர் குனிந்துக் கொண்டு நின்றதையும், அவர் முதுகில் ஏறி வயதான அந்த நபர் படகில் ஏறியதையும் சசிதரூர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததாகவும் சசிதரூர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.