இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவிகிதம் அளவுக்கு வரி விதித்துள்ளார். இதில் 25 சதவிகிதம் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ரஷ்யா உடனான வர்த்தக உறவுகளுக்கு எதிரான 25 சதவிகித அபராத வரி என்பது 21ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் நல்ல நட்புறவைக் கொண்டிருக்கும் இந்தியா மீது 50 சதவிகித வரிவிதிப்பு என்பது ஏற்கத்தக்கதல்ல என்று பல்வேறு நாடுகளும் கூறி வருகின்றன.இந்த நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி தரும்விதமாக இந்தியாவும் 50 சதவிகித வரியை அவர்கள் மீது விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் சசி தரூர் பேசுகையில், "அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் 17 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் 50 சதவிகிதம் விதிக்கின்றனர். நாம் மட்டும் ஏன் 17 சதவிகிதத்துடன் நிறுத்த வேண்டும்? நாமும் 50 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். இந்தியாவைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை என்றால், நாமும் அவர்களைப் பற்றி கவலைப்படக் கூடாது.
நம்முடைய நட்பு நாடு என்று நினைத்த அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது, நட்பார்ந்த விஷயம் அல்ல. இவற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் சூழ்நிலையில்தான், நாம் பிற வர்த்தகக் கூட்டாளிகளைப் பார்க்க வேண்டும். யுரேனியம், பல்லேடியம், உரம் போன்ற பொருள்களை ரஷியாவிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடே. சீனாதான் இந்தியாவைவிட ரஷியாவிடமிருந்து அதிகளவில் எண்ணெய் வாங்குகிறது. ஆனால், சீனாவுக்கு மட்டும் 90 நாள்கள் கெடு விதித்துள்ளனர்; நமக்கு 3 வாரங்கள் மட்டுமே." என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.