மக்களவை, மாநிலங்களவைக் கூட்டங்களுக்காக, அதிகமான உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் அதிக இருக்கைகளை உள்ளடக்கியதாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு கடந்த 2020இல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், இந்த கட்டடம், சுமார் 64,500 சதுர மீட்டர் பரப்பளவுக்கு முக்கோண வடிவில் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்துக்கு ’சென்ட்ரல் விஸ்டா' எனச் சிறப்பு பெயரும் சூட்டப்பட்டது. இதற்காக, முதலில் ரூ.971 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நிலையில், பின்னர் அது, ரூ.1,000 கோடிக்கு மேல் வரை சென்றதாகக் கூறப்படுகிறது. கட்டமானப் பணிகள் நிறைவுற்ற பின்னர், 2023 மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவின்போது பூஜைக்குப் பிறகு தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. செங்கோலைக் கையில் ஏந்தியபடி ஆதீனங்களிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி, நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்று சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடிப் பெட்டிக்குள் அந்தச் செங்கோலை நிறுவினார். என்றாலும், அப்போதும் இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பின்போது மரபுப்படி, பசுவை முதன்முதலில் உள்ளே அழைத்துச் செல்லாதது தவறு என அவிமுக்தேஸ்வரானந்த சங்கராச்சாரியார் கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”பிரதமர் மோதடி எடுத்துச்சென்ற செங்கோலில் பசுவின் உருவம் இருந்தபோது உண்மையான பசுவை உள்ளே அழைத்துச்செல்வதில் என்ன தவறு இருக்கிறது? தாமதமானாலும் நாடெங்குமிருந்து பசுக்களைக் கொண்டு வந்து நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் கொண்டு செல்லவேண்டும். இதன்மூலம் பிரதமருக்கும் நாடாளுமன்றத்திற்கும் அவற்றின் ஆசி கிடைக்கும்” என்றார்.
தொடர்ந்து அவர், “பசுவை எவ்வாறு கௌரவிப்பது என்பதை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. மகாராஷ்டிராவில், மக்கள் அதைப் பின்பற்றக்கூடிய வகையில் ஒரு நெறிமுறையை இறுதி செய்ய வேண்டும். மேலும், அதன் மீறலுக்கான தண்டனைகளையும் நிர்ணயிக்க வேண்டும். மேலும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 100 பசுக்களைக் கொண்ட ஒரு ’ராமதம்’ - ஒரு பசு தங்குமிடம் இருக்க வேண்டும்” என்றார்.
மேலும் அவர், ”பசுவை ராஷ்டிரமாதா (தேசத் தாய்) என்று அறிவிக்க வேண்டும்” என்ற ஹோஷங்காபாத் நாடாளுமன்ற உறுப்பினர் தர்ஷன் சிங் சவுத்ரியின் கோரிக்கையை ஆதரித்துப் பேசிய அவர், “பசுக்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு ஆதரவாக சட்டம் இயற்றும் வேட்பாளர்களை மட்டுமே வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும். நமக்கு பால் தரும் பசுக்கள் படுகொலை செய்யப்படும்போது, அரசாங்கம் அமிர்தக் காலத்தைக் கொண்டாடுவது நகைப்புக்குரியது. அரசாங்கத்தில் இருப்பவர்கள் பசுக்களுக்கு ஆதரவாக நிற்காவிட்டால், அவர்களை நமது சகோதரர்கள் என்று அழைக்க முடியாது" என்று அவர் மேலும் கூறினார்.