சத்குருவைச் சந்தித்தபோது ஷாருக்கான் மற்றும் அனந்த் அம்பானி இடையே நடந்த உரையாடல் தொடர்பான வீடியோ வைரலானது. இதனால் ஷாருக்கானின் சட்டக் குழு அவதூறு நோட்டீஸ் அனுப்பி, வீடியோவை நீக்கவும் தவறான தகவல்களை திருத்தவும் கோரியுள்ளது. இது கருத்துச் சுதந்திரம் என இன்ஃப்ளூயன்ஸர் வாதிக்கிறார்.
செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆன்மிகத் தலைவர் சத்குருவைச் சந்தித்தபோது அனந்த் அம்பானி மற்றும் ஷாருக்கான் இடையே நடைபெற்ற உரையாடல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. சுவிக்யா சர்மா (Suvigya Sharma) என்ற இன்ஃப்ளூயன்ஸர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில், அனந்த் அம்பானி ஷாருக்கானை அமைதியாக இருக்கும்படி கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டு தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், நவம்பர் 23ஆம் தேதி ஷாருக்கானின் சட்டக் குழு சுவிக்யா சர்மாவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், வீடியோவுடன் பகிரப்பட்ட கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், உரையாடலின் உண்மையான பின்னணியை மறைத்து நடிகரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023 சட்டத்தின் பிரிவு 356-ஐச் சுட்டிக்காட்டியுள்ள சட்டக் குழு, ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைப் பரப்புவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்குள் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க வேண்டும், அதுதொடர்பான தவறான தலைப்புகள் மற்றும் கருத்துகளைத் திருத்த வேண்டும், அந்தக் குற்றச்சாட்டை மீண்டும் பரப்பக்கூடாது என்றும் நோட்டீஸில் கோரப்பட்டுள்ளது. மேலும், அசல் வீடியோ மற்றும் அது தொடர்பான பதிவுகளைப் பாதுகாத்து, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள சுவிக்யா சர்மா, மற்றொரு வீடியோவை வெளியிட்டு ஷாருக்கானின் நடவடிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். அதில், வைரல் வீடியோவில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கு ஷாருக்கான் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார் எனக் கேள்வி எழுப்பியதுடன், இது கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையிலான விமர்சனம் என்றும் வாதிட்டுள்ளார்.
மேலும், "ஷாருக்கானை அமைதியாக இருக்கச் சொன்னதாகக் கூறப்படும் நபர் அவரை அவமதிக்கவில்லையா? அல்லது தன்னை அவமதித்ததாகக் கூறும் தைரியம் ஷாருக்கானுக்கு இல்லையா? ஆனால், நாங்கள் அவரை அவமதித்துவிட்டதாகக் கூறப்படுகிறது" என அவர் பேசியுள்ளார்.
ஒரு சில நொடிகள் கொண்ட வீடியோவால் தொடங்கிய இந்தச் சர்ச்சை, தற்போது சட்டப் போராட்டம் வரை சென்றுள்ளது. ஒருபுறம் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக ஷாருக்கான் குற்றம்சாட்ட, மறுபுறம் இது கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையிலான விமர்சனம் என இன்ஃப்ளூயன்ஸர் கூறியுள்ளார்.