இந்தியா

வெளிநாடு செல்ல முயன்ற காஷ்மீர் அரசியல் பிரமுகர் - திருப்பி அனுப்பிய அதிகாரிகள்

webteam

டெல்லி விமான நிலையம் வந்த ஜம்மூ-காஷ்மீரை சேர்ந்த முன்னாள் ஐஏஸ் அதிகாரியும், அரசியல் பிரமுகருமான ஷா ஃபசல் என்பவர் ஸ்ரீநகருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை கடந்த 5ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது. அத்துடன் அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு செல்போன் இணைப்புகள் மற்றும் இணையதளங்களும் முடக்கப்பட்டன. மேலும் பல இடங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. அத்துடன் அரசியல் தலைவர்கள் பலரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். அத்துடன் அவர்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஷா ஃபசல் இன்று காலை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவரை அதிகாரிகள் தடுத்தி நிறுத்தினர். அத்துடன் மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பி வைத்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி அவரை திருப்பி அனுப்பியதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஷா துருக்கியில் உள்ள இஸ்தான்புல் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஷா, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் மாநில அரசியல் சாசனம் அழிக்கப்பட்டதாக கூறினார். அத்துடன், “எங்கள் பாரம்பரியம் பேரழிவிற்கு செல்வதை நான் பார்க்கிறேன். ஆகஸ்ட் 5ஆம் தேதியை எங்கள் அடையாளம் கொல்லப்பட்ட தினமாக கருதுகிறோம். அந்த நாள் எங்கள் வரலாறு, மாநில உரிமை, எங்களது இருப்பு ஆகியவற்றை கொன்ற தினமாகவும் உணர்கிறோம்” என்று தெரிவித்தார்.