12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் அதிகபட்சம் மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேறியது.
பாலியல் வன்கொடுமை சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை முதல் அதிகபட்சம் மரண தண்டனை வரை விதிக்க முடியும். மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு தற்போது குறைந்த பட்சமாக 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு வரும் நிலையில், அதை 10 ஆண்டாக உயர்த்தவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய திருத்தத்தின் படி, 16 வயதுக்குட்பட்ட சிறுமியரை வன்கொடுமைக்கு ஆளாக்கும் போது குறைந்த பட்சம் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையிலிருந்து அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கப்படும். 16 வயதுக்கு மேற்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்தால், குறைந்த பட்சம் 10 ஆண்டு சிறையிலிருந்து அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும். பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 2 மாதத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய வேண்டும். 16 வயதுக்குட்பட்ட சிறுமியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கப்படாது.
இதுதொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, பாலியல் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண விரைவு சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இம்மசோதா அடுத்து மாநிலங்களவையில் நிறைவேறவுள்ளது.