பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள், பெரும்பாலும் உரிய நேரத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பாலியல் குற்ற வழக்குகளில் விசாரணையை கண்காணிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, டெல்லி, ஹரியானா, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை பதிவான பாலியல் குற்ற வழக்குகளின் விவரங்கள் ஆராயப்பட்டன.
அதில், சுமார் 47ஆயிரம் பாலியல் வழக்குகளில், 26 ஆயிரம் வழக்குகளுக்கு மட்டுமே, குறித்த காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 3 ஆயிரத்திற்கும் மேலான பாலியல் வழக்குகள்\, 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஜனவரியில் இருந்து ஜூன் மாதம் வரையில், பதிவான 24 ஆயிரம் பாலியல் வழக்குகளில், வெறும் 4 சதவிகித வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைப்பதற்காக, நிர்பயா திட்டத்தின் மூலம் 767 கோடி ரூபாய் ஒதுக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், 10 மாதங்கள் கடந்த நிலையில் அத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
2018ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டத்திருத்தத்தின்படி, பாலியல் வழக்குகளை 60 நாட்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் அவை கடைபிடிக்கப்படுவதில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.