வன்முறை வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய ஹர்திக் படேலின் மனுவை உச்சநீதிமன்றமும் நிராகரித்துள்ளது.
படேல் சமூகத்தினற்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2015ம் ஆண்டில் ஹர்திக் படேல் போராட்டம் நடத்தினார். போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை காரணமாக ஹர்திக் படேல் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு விஸ்நகர் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனிடையே, கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் ஹர்திக் பிரச்சாரம் செய்தார். அதனையடுத்து, அகமதாபாத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில், கடந்த மார்ச் 12ம் தேதி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி முன்னிலையில் ஹிர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனையடுத்து, வருகின்ற மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
தேர்தலில் போட்டியிட அவர் மீதான வழக்கு சிக்கலை ஏற்படுத்தியது. மாவட்ட நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஹர்திக் படேல் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை அனுமதிக்க கூடாது என குஜராத் அரசின் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹர்திக் படேலின் கோரிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் மார்ச் 29ம் தேதி நிராகரித்தது. நீதிமன்றத்தில் ஹர்திக் படேலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
அதனையடுத்து, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 4 கடைசி நாள் என்பதால், மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், ‘என்ன அவசரம்’ என்று கூறி மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனால், ஹர்திக் படேலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால், தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.