அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் 6 எம்.எல்.ஏக்கள் உட்பட 18 பாஜக உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ,ஒடிஸா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆந்திரம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில பேரவைகளுக்கு, வரும் ஏப்ரல் 11 -ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் அருணாச்சல பிரதேசத்தில் 60 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதையடுத்து அருணாச்சல பிரதேசத்தின் 54 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜக வெளியிட்டது.
இந்தத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்ட பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த பாஜக நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர் கடந்த ஒரு வாரத்தில் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் பொதுச்செயலாளர் ஜர்பும் காம்பின், உள்துறை அமைச்சர் வெய், சுற்றுலாத்துறை அமைச்சர் ஜார்கர் காம்லின், மற்றும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இருந்து விலகி, கான்ராட் சங்மாவின், தேசிய மக்கள் கட்சியில் சேர்ந்தனர்.
வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் கடந்த ஆண்டுதான் பாஜக கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைத்தது. இப்போது, பாஜக மூத்த தலைவர்கள் பலர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
60 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட அருணாச்சல பிரதேசத்தில் குறைந்தது 30 - 40 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்த முயற்சித்து வருகிறோம் எனவும் அதில் வெற்றி பெற்றால் தனித்தே ஆட்சியை பிடிப்போம் எனவும் தேசிய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் தாமஸ் சங்மா தெரிவித்துள்ளார்.
“முதலமைச்சர் குடும்பங்களுக்கு மூன்று சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் பாஜகவின் முந்தைய மகிமையை தற்போது உள்ள பாஜக பொய்யான வாக்குறுதிகளால் இழந்து வருகிறது” என உள்துறை அமைச்சர் வெய் தெரிவித்தார்.