இந்தியா

‘20 மாதங்களில் 10 பேர் சத்தமில்லாமல் கொலை’ - ‘சீரியல் கில்லர்’ சயனைடு சிவா கைது 

‘20 மாதங்களில் 10 பேர் சத்தமில்லாமல் கொலை’ - ‘சீரியல் கில்லர்’ சயனைடு சிவா கைது 

webteam

திரைப்படத்தில் வருவதை போன்ற ‘சீரியல் கில்லர்’ ஒருவனை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஊர் எலுரு. இந்த ஊர் போலீசார், சிவா என்பரை கைது செய்துள்ளனர். இவர் கடந்த 20 மாதங்களில் மட்டும் 10 பேரை சயனைடு வைத்து கொலை செய்திருப்பதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் 20 பேரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இந்தச் செய்தியால் ஆந்திர மாநிலம் அதிகமாகவே ஆடி போய் உள்ளது.

இத்தனை ஆண்டுகளாக போலீஸ் கண்களில் மண்ணை தூவி வந்த இந்த ‘சீரியல் கில்லரை’  எலுரு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இவரது வயது 38 என்றும் இவருக்கு வெல்லன்கி சிம்ஹந்ரி என்ற இன்னொரு பெயரும் இருப்பது விசாரணையின் போது சிவா ஒப்புக் கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கேரளாவை சேர்ந்த ஜாலி ஜோசப் என்ற பெண் சயனைடு விஷம் வைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கொலை செய்து வந்ததைபோல, அதே வழிமுறையை பயன்படுத்தி இந்தப் பத்து பேரையும் சிவா, கொன்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த ஜாலி ஜோசப் தனது குடும்ப உறுப்பினர்களையே தொடர்ந்து விஷம் வைத்து கொன்று வந்தார். இப்படி அவர் மொத்தம் 6 பேரை கடந்த 14 ஆண்டுகளில் கொலை செய்திருப்பது கேரளாவில் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வழக்கு கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்தக் கொலை சம்பவம் கண்டறியப்பட்டு சில காலங்களே கடந்துள்ள நிலையில், இப்போது ஆந்திராவில் அதே ஃபார்முலாவை பயன்படுத்தி கொலை செய்து வந்தது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவா, 2018 ஆண்டில் இருந்து இரண்டு மாதத்திற்கு ஒருவரை கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. சிவாவினால் அவரது சொந்த பாட்டியும் மைத்துனியுமே கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

யார் இந்த சிவா?

சிவா, வாட்ச் மேன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். பிறகு ரியல் எஸ்டேட் வியாபாரம் பார்க்க தொடங்கியுள்ளார். அப்படியே பலரிடம் தன் வசம் மந்திர அரிசி (ரைஸ்புல்)  இருப்பதாகவும் மேஜிக் நாணயங்கள் இருப்பதாகவும் மேற்கொண்டு இருதலை பாம்பு வைத்திருப்பதாகவும், அதை வைத்து தன்னிடம் கொடுக்கும் பணத்தை அப்படியே இரட்டிப்பு ஆக்கி தர முடியும் என்றும் கூறி மோசடியில் ஈடுப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த மந்திர சக்தியால் நாள்பட்ட நோய்களான சர்க்கரை வியாதி போன்ற நோய்களை தன்னால் குணப்படுத்த முடியும் என்று ஆசை வார்த்தைகளை வீசி பலரை வலையில் வீழ்த்தியுள்ளார். இப்படியான மோசடியில் ஏற்பட்ட தகராறில் இவர் பலரை சயனைட் கொடுத்து கொலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் போலீஸ் விசாரணையில் இன்னும் 20 பேர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளதாக ஒரு உயர்காவல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொலை குறித்து போலீசார் கூறும் போது, சிவாவின் ரியல் எஸ்டேட் வியாபாரம் நஷ்டமாகி உள்ளது. ஆகவே அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் பிறகே இவர் இந்தப் பணமோசடி செய்யும் நாடகத்தை நடத்தி வந்ததாகவும் அதில் ஏற்பட்ட கொடுக்கள் வாங்கள் மூலம் உருவான தகராறில் இவர் பல கொலைச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினார் என்றும் தெரிவித்துள்ளனர். முதலில் தன்னிடம் சிக்கும் நபர்களிடம் பணத்தை கொண்டு வந்தால் அதை தங்கமாக மாற்றுவதாக சிவா கூறுவார். அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் இப்படி மோசடியில் ஈடுபடும் போது அவர்களிடம் இந்தப் பிரசாதத்தை சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும் என்பார். அவர்கள் உட்கொள்ளும் பிரசாதத்தில் சயனைட் மருந்தை மலந்து கொடுத்து விடுவார். அவர்கள் மர்மமான முறையில் இறந்த பிறகு வீட்டில் உள்ள பணம் நகைகளை கொள்ளையடித்து கொண்டு வெளியேறிவிடுவார் என்று இந்த வழக்குப் பற்றிய விவரங்களை  மேற்கு கோதாவதி சூப்ரண்ட் ஆஃப் போலீஸ் நவ்தீப் சிங் கிரேவால் குறிப்பிட்டுள்ளார்.

சிவா சிக்கியது எப்படி?

இப்படி பல இடங்களில் கைவரிசை காட்டி வந்த சிவா, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி  பிடிப்பட்டார். எலுருவில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்த நாகராஜூ என்பவரை கொலை செய்துவிட்டு, அவர் வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இந்தக் கொள்ளை குறித்து நாகராஜூவின் சகோதரர் வெங்கட ரமணா மறுநாள் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரை விசாரித்த போலீசார் வீட்டில் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் சிவா, கொள்ளையடித்து வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து இறுதியாக சீரியல் கில்லர் சிவாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.