இந்தியா

ஆளுநருடன் சிவசேனா தலைவர்கள் சந்திப்பு - ஆட்சியமைக்க உரிமை கோரினர்

ஆளுநருடன் சிவசேனா தலைவர்கள் சந்திப்பு - ஆட்சியமைக்க உரிமை கோரினர்

webteam

மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்த ஆதித்யா தாக்கரே மற்றும் சிவசேனா தலைவர்கள் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரினர்.

மகாராஷ்டிராவில் அதிக இடங்களை பெற்ற கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் பாஜக அதனை நேற்று நிராகரித்தது. இதனையடுத்து ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தையை நடத்தியது. 


சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகா அர்ஜூனா கார்கே, முகுல் வாஷ்னிக், அகமது பட்டேல், ஏகே அந்தோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து சிவசேனா ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியது. 


 

இந்நிலையில், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், சிவசேனா எம்.எல்.ஏ-வும் ஆன ஆதித்யா தாக்கரே மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தனர். அத்துடன் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சிலரும் வந்திருந்தனர். அவர்கள் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க அனுமதிக்குமாறு உரிமை கோரினர்.

இதனிடையே, சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதற்கான கடிதத்தை காங்கிரஸ் இன்னும் கொடுக்கவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வேண்டுகோபால் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.