மராத்தி மொழி தொடர்பாக ஆர்.எஸ். எஸ். தலைவர் பய்யாஜி ஜோஷி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மும்பைக்கு ஒரே மொழி இல்லை என்றும், மும்பைக்கு வரும் மக்கள் மராத்தி மொழியை கற்க வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் பய்யாஜி ஜோஷி தெரிவித்திருந்தார்.
அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்கு மகா விகாஸ் அகாடி கூட்டணியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மராத்தி மொழி நீண்ட காலமாக கலாசாரம் மற்றும் அரசியலின் அடையாளமாக இருக்கும் சூழலில் பய்யாஜி ஜோஷியின் கருத்தை மகாயுதி கூட்டணி ஆதரிக்கிறீர்களா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸும் பதிலளித்துள்ளார். அதில், “மராத்திதான் நம் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி; இந்த மாநிலத்தில் உள்ள அனைவரும் மராத்தியை கண்டிப்பாக கற்க வேண்டும்; மதிக்க வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சியிலும் கலாசாரத்திலும் மராத்திக்கு முக்கியப்பங்குள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட பய்யாஜி ஜோஷி, தன்னுடைய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், மும்பைக்கு வரும் வேறுமொழி பேசுவோர், மராத்தியை புரிந்து கொண்டு கற்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.