Parag Jain  x page
இந்தியா

’RAW’ உருவாக்கத்தில் இப்படியொரு வரலாறு இருக்கா! புதிய தலைவரின் முக்கிய பின்னணி..

இந்திய உளவு அமைப்பான Raw-ன் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் பராக் ஜெயின் ஐபிஎஸ்.

இர்ஃபாத் சமீத் / Irfath Sameeth

இந்திய உளவு அமைப்பான Raw-ன் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் பராக் ஜெயின் ஐபிஎஸ்.

உளவு அமைப்புகளின் பணிகள் என்ன?

உலகின் ஒருசில உளவு அமைப்புகளே அதிகம் புகழ்பெற்றவை. சொந்த நாட்டுக்கு எதிராக நடக்கும் சதி வேலைகள் தொடர்பாக பிற நாட்டு மண்ணில் இருந்து தகவல்களை சேகரிக்கவும், ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்த உளவு அமைப்புகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் CIA, இஸ்ரேலின் மொசாட், பிரிட்டனின் MI6, ரஷ்யாவின் FSB மற்றும் இந்தியாவின் RAW ஆகியவை உலகில் முன்னணியில் இருக்கும் டாப் 5 உளவு அமைப்புகள் ஆகும். இதில் இந்திய உளவு அமைப்பான Raw 1968 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1962 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட போர்களின் போது இந்தியாவுக்கு வெளியில் இருந்து வரும் எச்சரிக்கைகளை நாட்டின் புலனாய்வுப் பிரிவு கணிக்க தவறியதாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

RAW உருவான பின்னணி!

RAW புலனாய்வு அமைப்பிடம் இருந்து பல்வேறு வகையில் மாறுபட்டதாக இருக்குமாறு உருவாக்கம் செய்யப்பட்டது. முக்கியமாக, RAW ஒரு ரகசிய அமைப்பாக இருக்க வேண்டும். Raw உறுப்பினர்கள் திரைமறைவாக இருக்க வேண்டும்

குறிப்பாக, 1962 ஆம் ஆண்டு சீனாவுக்கு எதிரான போர் தொடங்குவதற்கு முன்பு, அப்போதைய புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த பி.என். முல்லிக் பிரதமர் நேரு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் கிருஷ்ணா மேனன் ஆகியோரிடம் சீனா இந்தியாவை தாக்க வாய்ப்புள்ளதாக நேரடியாக தகவலை கூறியிருக்கிறார். இருப்பினும், சீனா ’எல்லை மோதலை தவிர பெரிய அளவிலான தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை’ என்கிற தன்னுடைய கருத்தையும் சேர்த்தே கூறியிருக்கிறார். மேலும், அந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக சீனா படைகளை குவித்ததையும் இந்திய உளவு அமைப்பு கணிக்க தவறிவிட்டதாகவும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இப்படியான பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகே 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வெளியே இருந்து வரும் அச்சுறுத்தல்களை கண்காணிக்க Raw அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு ஏற்கனவே இருந்த புலனாய்வு அமைப்பிடம் இருந்து பல்வேறு வகையில் மாறுபட்டதாக இருக்குமாறு உருவாக்கம் செய்யப்பட்டது. முதலாவதாக, RAW ஒரு ரகசிய அமைப்பாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. குறிப்பாக Raw உறுப்பினர்கள் திரைமறைவாக இருக்கும்படி வடிவமைப்பு செய்யப்பட்டனர்.

ரகசியம்.. ரகசியம்.. RAW எப்படி செயல்படும்?

1977 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்துக்கு பிறகு இந்திரா காந்தி பதவி விலகிய காலகட்டத்தில் RAW அமைப்பு உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டது என விமர்சிக்கப்பட்டது.

புலனாய்வு பிரிவை போல அல்லாமல் Raw எந்த அமைச்சகத்தின் கீழும் முழு கட்டுப்பாட்டில் இருக்காது; ஆனால். அமைச்சரவை செயலகத்தின் கீழ் வரும். மேலும், RAW பல அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதுமட்டுமின்றி, செயல்பாட்டு விஷயங்கள் மற்றும் மதிப்பீடுகளுக்காக RAW தலைவரால் பிரதமரை நேரடியாக அணுக முடியும். 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் நெருக்கடியின் போது, RAW தனக்கென ஒரு நிலையை எட்டியது. பாகிஸ்தான் இராணுவம் வங்காளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு, RAW அமைப்பு அவாமி லீக் தலைமையுடன் தொடர்பில் இருந்தது மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் அவசர திட்டங்களை வகுத்தது.

1971 நெருக்கடி அரசாங்கத்திற்குள் RAW இன் நிலைப்பாட்டை வலுப்படுத்தியது. இதன் பின்னர் சிக்கிம் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளின் போது RAW முக்கியப்பங்கு வகித்தது. 1977 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்துக்கு பிறகு இந்திரா காந்தி பதவி விலகிய காலகட்டத்தில் RAW அமைப்பு உள்நாட்டு அரசியல் லாபங்களுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டது என விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விமர்சனங்களை அப்போதைய RAW அமைப்பின் தலைவர் காவோ நிராகரித்திருந்தார். இந்த அமைப்பின் அதி ரகசிய செயல்பாடுகள் காரணமாகவே அதிக சர்ச்சையில் சிக்குவதாகவும் அதன் பிறகான காலகட்டத்தில் அவர் விளக்கினார்.

சமீபத்தில் கூட அமெரிக்காவில் இருக்கும் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவை RAW அமைப்பு கூலிப்படையை பயன்படுத்தி கொலைசெய்ய முயற்சி செய்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் RAW அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் என்பவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தற்போதைய தலைவரான ரவி சின்ஹாவின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள சூழலில் அடுத்த தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய தலைவர் - யார் இந்த பராக் ஜெயின்?

1989 பேட்ச் பஞ்சாப் கேடரை சேர்ந்த பராக் ஜெயின் அடுத்த 2 ஆண்டுகள் பதவியில் இருப்பார். இதற்கு முன்னதாக RAW அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவான விமான ஆராய்ச்சி மையத்தின் (ARC) தலைவராகப் பணியாற்றினார். இதுதவிர பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சித்தூர் நடவடிக்கைக்கு பின்னால் செயல்பட்ட ஒருசில முக்கிய நபர்களில் இவரும் ஒருவர்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த அவரது உளவுத்துறை தகவல்கள் உதவின. இதுதவிர 2019 ஆம் ஆண்டு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட சமயத்தில் அந்த பகுதிக்கான சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார். கடந்த பத்தாண்டுகளில், ஜெயின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் தவிர, இலங்கை மற்றும் கனடா உள்ளிட்ட பல முக்கியமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பணிகளை வகித்துள்ளார். முக்கியமாக இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன் உள்நாட்டு கலவரம் வெடித்து அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பி சென்று புதிய அரசாங்கம் அமைந்த காலகட்டத்தில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளில் பராக் ஜெயின் முக்கிய பங்காற்றினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்பரேஷன் சித்தூர் நடவடிக்கைக்கு பின்னால் செயல்பட்ட ஒருசில முக்கிய நபர்களில் இவரும் ஒருவர் பராக் ஜெயின்.

அந்த முக்கியமான காலகட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான கொந்தளிப்பான நிலைமையை கையாளவும், இந்திய எதிர்ப்பு மனநிலையை சமாளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். இலங்கைக்கு முன்னதாக கனடாவில் பணியாற்றிய சமயத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளையும் அவர் எதிர்கொண்டுள்ளார். தன்னுடைய அமைதியான மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கும் மற்றும் வெளியுலக வெளிச்சத்தை தவிர்ப்பதிலும் உளவுத்துறை வட்டாரத்தில் பராக் ஜெயின் அதிக அளவு பிரபலம். உலக அளவில் நடக்கும் புவிசார் அரசியல் மாற்றங்கள், இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நடக்கும் அரசியல் மாற்றம், ஏற்கனவே இருக்கும் சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் RAW அமைப்பின் தலைவர் பதவிக்கு வரும் பராக் ஜெயின்னுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.