மருத்துவர் மற்றும் நோயாளி கைகலப்பு PTI
இந்தியா

சிம்லா | அரசு மருத்துவமனையில் நோயாளியை அடித்த மருத்துவர்.. அதிரடியாக பணிநீக்கம்!

சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளி மீது தாக்குதல் நடத்திய மூத்த மருத்துவரை பணி நீக்கம் செய்து இமாச்சல அரசு உத்தரவிட்டுள்ளது.

PT WEB

சிம்லா அரசு மருத்துவமனையில், டாக்டர் ராகவ் நிருலா மற்றும் நோயாளி அர்ஜுன் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, டாக்டர் ராகவ் நிருலா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மருத்துவர்கள் சங்கம் இந்த நடவடிக்கையை ஒருதலைப்பட்சமானது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசம் சிம்லாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கடந்த, டிசம்பர் 22-ஆம் தேதி நுரையீரல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அர்ஜுன் (36) என்ற நோயாளிக்கும், டாக்டர் ராகவ் நிருலா என்ற ரெசிடண்ட் மூத்த மருத்துவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது, பின்னர் கைகலப்பாக மாறியது.

இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிம்லா

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து நோயாளி அர்ஜுன் தரப்பு கூறுகையில், மருத்துவர் ராகவ் நிருலா தன்னை மரியாதையின்றி 'தூ' என்று ஒருமையில் அழைத்ததால் வாக்குவாதம் தொடங்கியதாகவும், அதன் பிறகு மருத்துவர் தன்னைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார். மருத்துவர் தரப்பில், நோயாளி தான் முதலில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதையடுத்து, டிசம்பர் 22-ஆம் தேதியே டாக்டர் ராகவ் நிருலா தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து விரிவாக விசாரிக்க இமாச்சல் அரசு ஒரு குழுவை அமைத்தது.

அக்குழு தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில், ’மருத்துவர் மற்றும் நோயாளி ஆகிய இரு தரப்புமே இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பு என்றும், இது ஒரு பொது ஊழியரின் நடத்தைக்கு மாறானது’ என்றும் குறிப்பிட்டுள்ளது.

விசாரணைக் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, டிசம்பர் 24 ஆம் தேதியான நேற்று இமாச்சலப் பிரதேச மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம், டாக்டர் ராகவ் நிருலாவை உடனடியாகப் பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அர்ஜுனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், ரெசிடண்ட் மருத்துவர்கள் சங்கம் இந்த நடவடிக்கையை ஒருதலைப்பட்சமானது எனக் கூறி மருத்துவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.