இந்தியா

ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது புகை பிடித்த மூத்த வழக்கறிஞர் : வைரலாகும் வீடியோ

EllusamyKarthik

கொரோனா அச்சுறுத்தலினால் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விர்ச்சுவல் வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் ஒருவர் ஹூக்கா பிடித்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரசோடு இணைப்பது தொடர்பான மனு மீதான விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் புகை பிடிக்கின்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.   

வழக்கறிஞரும், அரசியல் தலைவருமான கபில் சிபல் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்து விவாதிக்கும் போது ராஜீவ் தவான் தனது முகத்தினை பேப்பரினால் மறைத்துக் கொண்டு புகை பிடித்துள்ளார். இருந்தாலும் அந்த வீடியோவில் வளைய வடிவில் புகை எழுத்து பதிவாகியுள்ளன. 

வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் புகை பிடித்த சம்பவம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தால் கவனிக்கப்பட்டதா என்பதும் தெளிவாக பதிவு செய்யப்படவில்லை. 

ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் குறைந்தபட்ச நீதிமன்ற நாகரீகங்களை கடைபிடிக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.