மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா இடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் இழுபறி நீடித்ததால், கூட்டணி ஆட்சி அமையவில்லை. இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், விவசாயிகள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களை இன்று பிற்பகல் சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக் கூறினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், மூன்று கட்சிகளும் சேர்ந்து நிலையான அரசு அமைக்க விரும்புவதாகக் கூறினார். அரசு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றும், இடையில் தேர்தல் வர வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் இன்று சரத்பவார் ஆலோசனை நடத்த உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், பாரதிய ஜனதா அல்லாத எந்த கட்சியாலும், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை தருவதற்கு பாரதிய ஜனதா முயன்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.