மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 48 மணி நேரம் அவகாசம் கேட்டதாகவும் ஆனால் ஆளுநர் மறுத்துவிட்டதாகவும் சிவசேனா எம்.எல்.ஏ ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் அதிக இடங்களை பெற்ற கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய ஆதரவு கிடைக்காததால் பாஜக அதனை நேற்று நிராகரித்தது. இதனையடுத்து ஆட்சியமைக்க சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் சிவசேனா ஈடுபட்டு வருகிறது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் உத்தவ் தாக்கரே பேச்சுவார்த்தை நடத்தினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்தார்.
இதனிடையே, சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை செய்த பிறகே முடிவு தெரிவிக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துவிட்டது. ஆனால், ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆதித்ய தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா தலைவர்கள் ஆளுநர் பகத் சிங் கோஷாரியை இரவு 7 மணிக்கு சந்தித்தனர். சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சிலரும் அவர்களுடன் சென்றனர். ஆளுநர் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேற்று மாலை ஆளுநரிடம் இருந்து ஏக்நாத் ஷிண்டே கடிதத்தை பெற்றார். 24 மணி நேரத்திற்குள் மற்ற கட்சிகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். தற்போது, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க விரும்புவதாக அளுநரிடம் தெரிவித்துள்ளோம்.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து இன்னும் ஆதரவு கடிதத்தை பெறவேண்டியுள்ளது. கூடுதல் நேரம் வேண்டும் என நாங்கள் ஆளுநரிடம் கேட்டோம். 48 மணி நேரம் கேட்டோம். ஆனால், கூடுதல் நேரம் கொடுக்க ஆளுநர் மறுத்துவிட்டார். இருப்பினும், ஆட்சி அமைக்க உரிமை கோரிய எங்கள் கோரிக்கையை அவர் நிராகரிக்கவில்லை. அதனால், ஆட்சி அமைக்க தேவையான முயற்சிகளை தொடர்ந்து செய்வோம்” என்றார்.
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா பொறுப்பாளருமான மல்லிகார்ஜுன கார்க்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் இரண்டு தலைவர்கள் நாளை மகாராஷ்டிரா சென்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளதாகவும் அந்த ஆலோசனைக்கு பின்னர் இருதரப்பினரும் இணைந்து சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான முடிவை அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.