அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக முயன்று வருவதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, "இந்திய ஜனநாயகம் கடந்த 70 ஆண்டுகளாக கண்ணுக்கு புலப்படாத பணப்பரிவர்த்தனை மூலமாகவே இயங்கிவருகிறது. இதைத் தடுக்க மக்கள் பிரதிநிதிகள், அரசுகள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்து தரப்பும் தவறிவிட்டது வேதனை அளிக்கிறது. அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை ஒழுங்கு படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒருவர் கூட அத்தகைய ஆலோசனைகளை வழங்க முன்வரவில்லை. தற்போதைய நிலை தொடர்வதையே அவர்கள் அனைவரும் விரும்புவதாக தெரிகிறது. எதிர்காலத்தில், வெளிப்படையான, தூய்மையான பணப்பரிவர்த்தனை மூலம் தேர்தல் ஜனநாயகத்தை மேம்படுத்த முடியும்" என்று கூறினார். அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.