இந்தியா

73வது குடியரசு தின கொண்டாட்டம்: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

JustinDurai

நாட்டில் 73-வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் 73-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். குடியரசு தின விழாவையொட்டி முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தின விழா காலை 10.30 மணியளவில் தொடங்கி, நண்பகல் 12 மணிக்கு நிறைவடைகிறது.

விழா தொடங்கும் முன்பாக, தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக முப்படைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது. பின்னர் விஜய் சவுக் பகுதியில் இருந்து ராஜபாதை வழியாக முப்படை அணிவகுப்பு நடக்க உள்ளது. இந்த அணிவகுப்பின் மரியாதையை தேசியக் கொடி ஏற்றிய பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொள்வார்.

தமிழ்நாட்டில் குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை நடைபெறும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றுகிறார். விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார். ஒவ்வொரு குடியரசு தின விழாவின் போதும் பள்ளி- கல்லூரி மாணவிகள், தென்னக கலை பண்பாட்டு மையம் சார்பில் பிற மாநில கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் மெரினா கடற்கரையில் ஒரு மணி நேரம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு 30 நிமிட நேரத்தில் விழாவை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.