செய்தியாளர் ராஜீவ்
கர்நாடக மாநிலம் பிதூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் அருகே எஸ்.பி.ஐ வங்கி ஒன்று உள்ளது. இங்கிருந்து ஏடிஎம் நிலையங்களுக்கு பணம் எடுத்துச் செல்வதற்காக காலை 10.30 மணியளவில் பணப்பெட்டியை பாதுகாப்பு ஊழியர்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் பாதுகாப்பு ஊழியர்கள் மீது மிளகாய் தூளை வீசி பணப்பெட்டியை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதில் பாதுகாப்பு பணியாளர்கள் கிரிஸ், சிவகுமார் இருவரும் கொள்ளையர்களிடமிருந்து பணப்பெட்டியை பாதுகாக்க போராடிய போது கொள்ளையர்களில் ஒருவர் துப்பாக்கியால் இரு ஊழியர்களையும் சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலே பாதுகாப்பு பணியாளர் கிரிஸ் உயிரிழக்க, மற்றொரு பணியாளர் சிவகுமார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான செல்ஃபோன் காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில், கொள்ளையர்களை சாலைகள் செல்லும் மக்கள் கற்களை எடுத்து அடித்தபோதும், துப்பாக்கியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் பணப்பெட்டியை இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லக்கூடிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் பட்டப் பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டு வங்கியின் பணப்பெட்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில் தனிப்படை அமைத்து கர்நாடக போலீசார் கொள்ளையர்களை தேடி வருவதாக கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.