இந்திய எல்லைப் பகுதியில் பறந்த டிரோன்கள் Pt web
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் | எல்லைகளில் பாகிஸ்தான் டிரோன்கள் ஊடுருவல்., பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை.!

ஜம்மு-காஷ்மீரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் நேற்று, மாலை 6.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் டிரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டது. இதனால் எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PT WEB

ஜம்மு காஷ்மீரின் சம்பா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய மூன்று முக்கிய எல்லை மாவட்டங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில், டிரோன்கள் பறப்பது கண்டறியப்பட்டது. ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா பகுதியில் ட்ரோன்கள் பறப்பதைக் கண்ட இந்திய ராணுவத்தினர், நடுத்தர மற்றும் இலகுரக இயந்திரத் துப்பாக்கிகளால் அதை நோக்கிச் சுட்டனர். இந்திய எல்லைக்குள் சில நிமிடங்கள் வட்டமடித்த இந்த டிரோன்கள், பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே சென்று மறைந்தன.

கோப்பு படம் (டிரோன்)

இதையடுத்து, டிரோன்கள் மூலம் ஆயுதங்களோ அல்லது போதைப்பொருட்களோ இந்திய எல்லைக்குள் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த டிரோன் ஊடுருவல் காரணமாக எல்லை முழுவதும் 'அலர்ட்' செய்யப்பட்டுள்ளது.

கடந்த, வெள்ளிக்கிழமை சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் டிரோன் மூலம் வீசப்பட்ட துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்க எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.