இந்தியா

நாளை குடியரசு தினம்: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

jagadeesh

நாட்டின் 71 ஆவது குடியரசு தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து தலைநகர் டெல்லியில், முப்படை அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாசாரத்தை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெறுகின்றன.

தமிழக அரசின் சார்பில் அய்யனார் கோயில் கொடை விழா போன்ற காட்சி அமைப்பு அணி வகுப்பில் இடம் பெறுகிறது. குடியரசு தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகைகள் முடிந்துள்ள நிலையில், விழா நடைபெறும், ராஜபாதை முதல் செங்கோட்டை வரை பாது‌காப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 1‌5 ஆயிரம் காவலர்கள் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர், துணை ராணுவ படை வீரர்கள் பல்வேறு குழுக்களாக ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய இடங்களான செங்கோட்டை, சாந்தினி சவுக் உள்பட 150க்கும் மேற்பட்ட இடங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன. டெல்லிக்கு ரயில் மூலம் வரும் பார்சல் சர்வீஸ்க்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை‌ச் சேர்ந்த 3 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டது, குடியுரிமை திருத்தச் சட்டம் எதிரான போராட்டம், டெல்லி பேரவை தேர்தல் போன்ற காரணங்களால் எப்போதும் இல்லாத வகையில் குடியரசு தினத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.