இந்தியா

புதுச்சேரியில் கடல் சீற்றம்: இடிந்து விழுந்த பழைய துறைமுக பாலம்

kaleelrahman

புதுச்சேரியில் கடல் சீற்றம் காரணமாக பழுதடைந்திருந்த பழைய துறைமுக பாலம் இடிந்து விழுந்தது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரி கடற்பகுதி கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி கடற்கரையில் துறைமுகத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரை கடல் பகுதியில் கட்டப்பட்டிருந்த பழைய துறைமுக பாலம் திடீரென 100 மீட்டர் அளவிற்கு நள்ளிரவில் இடிந்து விழுந்தது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் தற்போது காந்தி பீடம் அமைந்துள்ள இடத்தில் பிரெஞ்ச் ஆட்சி காலத்தில் துறைமுகம் கட்டப்பட்டது. இது சேதமடைந்ததால், சுதந்திரத்திற்கு பிறகு வம்பாகீரப்பாளையத்தில் இரண்டாவது முறையாக 1956ல் புதிய துறைமுக பாலம் அமைக்கப்பட்டு ஏற்றுமதி இறக்குமதி நடைபெற்று வந்தது. காலப்போக்கில் துறைமுக கையாளும் பணி நிறுத்தப்பட்டதால் இது கடற்கரையை மெருகேற்றும் காட்சிப்பொருளானது.

புதுச்சேரி கடற்கரைக்கு வரும் சுற்றுலாவினர்களை வெகுவாக கவரும்; இந்த பாலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 100-க்கணக்கான திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது. பாரம்பரியமிக்க பழைய துறைமுக பாலத்தின் மேற்பரப்பு பளபளப்பாக இருந்தாலும் அடிப்பகுதி கான்கிரிட் தூண்கள் சேதமடைந்து பலவீனமாக இருந்து வந்தது. இதனால் பாலத்தின் மீது பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடல் சீற்றம் காரணமாக நள்ளிரவில் இடிந்து விழுந்துள்ளது. தற்போது அப்பகுதி முழுவதும் யாரும் செல்ல அனுமதிக்கப்படாமல் துறைமுக வாயில் கதவு மூடப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்ட பைபர் படகில் மீன் பிடிக்கும் மீனவர்கள் இந்த பாலத்தையே நம்பி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.