இந்தியா

1697-ல் இமாலய பகுதியில் ஏற்பட்ட பூகம்பம்... சான்றுகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

webteam

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிழக்கு இமாலய பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்துக்கான சான்றுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்ட தகவல்: கடந்த 1697-ஆம் ஆண்டு அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் உள்ள ஹைம்பாஸ்தி என்ற கிராமத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பற்றிய புவியியல் சான்றுகளை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.

சாதியா என்று வரலாற்று அறிஞர்களால் அழைக்கப்படும் இந்த நிலநடுக்கத்தால் ஏறத்தாழ அந்தப் பகுதி முழுவதுமே பெரிதும் பாதிக்கப்பட்டது.

கிழக்கு இமாலயப் பகுதிகளில் கட்டுமான திட்ட பணிகளுக்கான நிலநடுக்க ஆபத்து சார்ந்த வரைபடத்தில் இந்த ஆய்வு முக்கிய பங்கு வகிக்கும்.

புவியியல் சார்ந்த சான்றுகள் இல்லாத காரணத்தால், கிழக்கு இமாலய பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து வரலாற்று ஆவண காப்பகங்கள் ஏராளமான சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்புகின்றன.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் வாடியா இமாலய புவியியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் அருணாச்சலப் பிரதேசத்தின் ஹைம்பாஸ்தி கிராமத்தில் மிகப்பெரும் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கடந்த 1697-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாதியா நிலநடுக்கத்தின் தடங்களைக் கண்டறிந்தனர்.

நவீன புவியியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் இதனை ஆய்வு செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.