நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு கடைசி மூன்று நிமிடங்கள் இருந்த போதுதான் சிக்கல் ஏற்பட்டதாக விஞ்ஞான் பிரசாரின் அறிவியல் தொடர்பாளர் டி.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 திட்டத்தின் இறுதிக்கட்டமாக, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணியில், கடைசி நிமிடங்களில் சிக்னல் கிடைக்காமல் போனது. விஞ்ஞானிகள் மட்டுமின்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்க, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் திக் திக் 15 நிமிடங்கள் தொடங்கியது.
திட்டமிட்டபடி நிலவை நோக்கிச் சென்ற விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, சிக்னல் துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு கடைசி மூன்று நிமிடங்கள் இருந்த போதுதான் சிக்கல் ஏற்பட்டதாக விஞ்ஞான் பிரசாரின் அறிவியல் தொடர்பாளர் டி.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்த அவர், "இறுதி 15 நிமிடங்களில் முதல் 10 நிமிடங்கள் சாதாரணமானவை. தரையிறங்கும் நேரத்தில் கடைசி 3 நிமிடங்களில்தான் சிக்கல் ஏற்பட்டது. நிலவை வெற்றிகரமாகவே சுற்றிவந்தது, தரையிறங்கியதில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கும். ஆனால் ஆர்பிட்டரில் உள்ள கருவிகள் அனைத்தும் சிறப்பாகவே செயல்படுகின்றன.
உயிர் பிரியும் நிலையில் லேண்டர் இருப்பதாகவே சொல்ல வேண்டும். ரேடியோ கதிர்களைக் கொண்டு லேண்டரின் இடத்தை கண்டுபிடிக்கலாம். நிலவில் திட்டமிட்ட இடத்திற்கு அருகில்தான் லேண்டர் இருக்க வேண்டும். நிலவைத் தொடும்போது லேண்டரின் வேகம் அதிகரித்து திசை மாறியது’’ என தெரிவித்துள்ளார்.