இந்தியா

பஜ்ரங் தள நிர்வாகி கொலையால் தொடரும் பதற்றம்! ஷிவமொக்காவில் 24-ம் தேதி வரை பள்ளிகள் மூடல்

ஜா. ஜாக்சன் சிங்

கர்நாடகாவில் பஜ்ரங் தள நிர்வாகி கொலையால் எழுந்துள்ள பதற்றத்தை அடுத்து, ஷிவமொக்கா மாவட்டத்தில் வரும் 24-ம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டத்தில் பஜ்ரங் தள அமைப்பின் நிர்வாகியாக இருந்தவர் ஹர்ஷா. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது, கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து இந்தக் கொலை நடந்திருப்பதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியதால் இருதரப்பு மக்கள் இடையே மோதல் உருவாகும் சூழல் எழுந்தது. ஹர்ஷா கொலையை கண்டித்து ஷிவமொக்காவில் பல்வேறு பகுதிகளில் கடைகள் உடைப்பு, வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன.

இதனைத் தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக அம்மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஷிவமொக்காவில் பதற்றம் இன்னமும் குறையாததால், அங்குள்ள பள்ளிகளை வரும் 24-ம் தேதி வரை மூடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.