இந்தியா

அண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்!

அண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்!

Rasus

தன் அண்ணன் ஏமாற்றப்பட்டது குறித்த வழக்கை கண்டுகொள்ளாத, போலீசாருக்கு உத்தரவு போடும் விதமாக 10-ம் வகுப்பு சிறுவன் ஒருவன் வித்யாசமான யூகத்தை கையாண்டிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் குமார் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நல்ல வேலைக்காக முயற்சி மேற்கொண்டிருக்கிறார். ஆனால் எங்கு தேடியும் அவர் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் சாதிக் அன்சாரி என்பவர் துபாயில் வேலை வாங்கித் தருவதாக குமாரிடம் உறுதி கூறியிருக்கிறார். ஆனால் கொஞ்சம் செலவாகும் எனக் கூறிய சாதிக், குமாரிடம் இருந்து 45,000 பணத்தையும் அதற்காக பெற்றிருக்கிறார். ஆனால் சாதிக், தான் அளித்த வாக்குறுதியின் படி குமாருக்கு வேலைவாங்கித் தரவில்லை. குறைந்தபட்சம் ‘பணத்தையாவது கொடு’ என குமார் கேட்க அதற்கும் சாதிக் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டது குறித்து கோரக்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் குமார். ஆனால் போலீசார் இந்த வழக்கை சரிவர கண்டுகொள்ளவில்லை. பலமுறை புகார் அளித்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்திருக்கின்றனர். ‘தன் அண்ணனின் பணம் யோய்விட்டது’ போலீசாரும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் காட்டுகிறார் என யோசித்த குமாரின் தம்பி, புது வியூகம் ஒன்றை வகுத்திருக்கிறார். தனது நண்பர் ஒருவருடன் இணைந்த குமாரின் தம்பி, ட்விட்டரில் உத்தரபிரேதச டிஜிபி பெயரில் போலி அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். மேலும் அதில் குமார் ஏமாற்றப்பட்டது குறித்த புகாரை விரைவில் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரக்பூர் நகர காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார். இது உத்தரப்பிரதேச டிஜிபியின் உத்தரவு தான் என நினைத்த கோரக்பூர் நகர போலீசார், சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இதனையடுத்து குமாருக்கு 30,000 பணத்தை சாதிக் அளித்துவிட்டார். மீதி பணத்தை விரைவில் தருவதாகவும் கூறியிருக்கிறார்.

இதனிடையே உத்தரப்பிரதேச டிஜிபி பெயரில் போலி ட்விட்டர் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்டதில் குமாரின் தம்பி சிக்சிக் கொண்டார். ‘ஏன் டா’ போலியாக ஒரு அக்கவுண்ட் உருவாக்கி அதில் செய்தி பதிவிட்டாய்..? என போலீசார் விசாரிக்க, தன் அண்ணணுக்கு நியாகம் கிடைக்கத்தான் அப்படி செய்ததாக கூறியிருக்கிறார். சிறுவன் 10-ம் வகுப்புதான் படித்து வருகிறார். இதனையடுத்து சிறுவனை கடுமையாக கண்டித்த போலீசார் இனிமேல் அதுபோன்ற எந்த சம்பவத்திலும் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.