நொய்டாவில் பள்ளி மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நொய்டாவை சேர்ந்த இக்ஷா ராகவ் ஷா என்ற 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வெளியில் சென்ற அவளது பெற்றோர்கள் வந்து பார்த்த போது அவளது அறை பூட்டியிருந்தது. நீண்ட நேரமாகியும் சிறுமியிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இவ்விவகாரத்தில் சிறுமியின் பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். சிறுமி பள்ளி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றும் இதனால் அவளது ஆசிரியர்கள் அவளை திட்டியதாக தெரிவித்தனர். இதன் காரணமாக சிறுமி மிகுந்த மனவேதனையுடன் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சிறுமி மரணமடைந்த விவகாரத்தில் இதுவரை எந்தத் தற்கொலை கடிதமும் கிடைக்கவில்லை. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அறிக்கைக்கு பின்னரே எதுவும் கூற முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.