ஈட்டி
ஈட்டி  web
இந்தியா

மகாராஷ்டிரா: பயிற்சியின்போது ஈட்டி தலையில் துளைத்ததால் 15 வயது பள்ளி மாணவன் உயிரிழப்பு!

Rishan Vengai

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் மங்கான் தாலுகாவில் உள்ள ஒரு பள்ளியில் தாலுகா அளவிலான போட்டிகளுக்கு தயாராவதற்காக ஈட்டி எறிதல் பயிற்சியானது பள்ளி மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்று பயிற்சி பெற்றுள்ளனர். அப்போது பயிற்சியின்போது சக மாணவன் எறிந்த ஈட்டி மற்றொரு மாணவனின் தலையை துளைத்ததால் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த 15 வயது சிறுவன் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையினரின் கூற்றுப்படி “இறந்த பள்ளி மாணவனின் பெயர் ஹுஜேபா தாவரே. அவர் தன்னுடைய ஈட்டி எறிதல் பயிற்சியை முடித்துவிட்டு தன்னுடைய ஷூ லேஷை கட்டுவதற்காக கீழே அமர்ந்துள்ளார். அப்போது எதிர்திசையில் இருந்த மற்றொரு சிறுவன், அமர்ந்திருந்த தாவரே இருக்கும் திசையை நோக்கி ஈட்டியை எறிந்துள்ளார். தன்னை நோக்கி ஈட்டிவருவதை கவனிக்காத தாவரே தரையில் இருந்து எழும்போது பறந்து வந்த ஈட்டி அவருடைய தலையில் துளைத்துள்ளது. அப்போது பலத்த காயம் ஏற்பட்ட மாணவன் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே மாணவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஈட்டி

மேலும் மாணவனின் மரணம் குறித்து பேசியிருக்கும் காவல்துறையினர், “இது விபத்தாக தோன்றினாலும், ஈட்டி எறிதல் பயிற்சியின்போது பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகள் சரியாக கவனிக்கப்பட்டதா என்பது ஆய்வு செய்யப்படும். ஒருவேளை நிர்வாகத்தின் கவனக்குறைவு இருப்பது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.