இந்தியா

”தவறான கேள்விக்கு க்ரேஸ் மார்க் கேட்ட பட்டியலின மாணவர்”-உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

webteam

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற திண்டிவனத்தை சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் தவறான கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்து உள்ளார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 92 மதிப்பெண்கள் பெற்றவர் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்க கோரி மத்திய அரசுக்கும் தேர்வு முகமைக்கும் மனு அனுப்பினார்.

மனு மீது உரிய முடிவு எடுக்கப்படாத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்த நிலையில், கேள்வியை தவிர்க்காமல் ஏதாவது ஒரு விடையை அளித்து இருந்தால் மட்டுமே கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவர்கள் போன்ற விளிம்பு நிலை மக்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டியது அரசியல் சாசனம் சொல்லி இருக்கக்கூடிய அம்சம் எனவே பாதிக்கப்பட்ட மாணவருக்கு கருணை மதிப்பெண்களாக நான்கு மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய தேர்வுகள் முகமை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனு மீது மாணவர் தரப்பு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தனர்.