Kakoshi village
Kakoshi village representation image
இந்தியா

‘பந்தை எடுத்தது குற்றமா?’ குஜராத்தில் பட்டியலினத்தவர் கட்டைவிரலை துண்டித்த கொடூரம்... முழு விவரம்!

சங்கீதா

‘தீண்டாமை ஒரு பாவச்செயல்,

தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,

தீண்டாமை மனித நேயமற்றது’

என்று பாடப் புத்தகங்களின் முதற்பக்கத்தில் அச்சிடப்பட்டுவிட்டாலும், இன்றளவும் தீண்டாமை என்பது குறைந்தபாடில்லை என்பதற்கு இந்திய திருநாட்டில் அவ்வப்போது நடக்கும் சில சம்பவங்கள் உதாரணங்களாக உள்ளன. அதில் குஜராத் மாநிலத்தில் கடந்த ஞாயிறு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் இணைந்துள்ளது.

tennis ball

குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் ககோஷி கிராமத்தில் உள்ள ஐடி செலியா உயர்நிலைப்பபள்ளியில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, உள்ளூரைச் சேர்ந்த உயர் பிரிவைக் கொண்ட சிலர் கிரிக்கெட் விளையாடியதாக தெரிகிறது. அப்போது அங்கே ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவனின் கையில் இருந்த டென்னிஸ் பந்து மைதானத்திற்குள் உருண்டு ஓடியதாகத் தெரிகிறது.

அதனை அந்த சிறுவன் ஓடிவந்து வேகமாக எடுத்துள்ளான். இதனால், ஆத்திரமடைந்த குல்தீப் சிங் (கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்), அந்த சிறுவனை இதுபோன்று செய்யக்கூடாது என்று கடுமையாக மிரட்டியதாகத் தெரிகிறது. மேலும் சாதியை குறிப்பிட்டு வசைப்பாடியதுடன், கீழ்த்தரமாகவும் அச்சுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வார்த்தைகளால் சிறுவன் மிரட்சியான நிலையில், அவனது தந்தை கிர்த்தி தயாபாய் பர்மர் என்பவரின் சகோதரர் தீரஜ் பர்மர், குல்தீப் சிங் உள்ளிட்டவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்கு குற்றஞ்சாட்டப்பட்ட குல்தீப் சிங், ‘உனக்கு தக்கப்பாடம் புகட்டுகிறேன்’ என தீரஜ் பர்மரை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தீண்டாமை

அதன்பேரில் கிரிக்கெட் போட்டி முடிந்ததும் குல்தீப் சிங் மற்றும் சிலர், தீரஜ் பர்மரிடம் சென்று சண்டையிட்ட நிலையில், அங்கிருந்த சிலர் அவர்களை கட்டுப்படுத்தியுள்ளனர். அவர்களின் தலையீட்டால் அந்தப் பிரச்சனை அப்போதே முடிந்துள்ளது. தீரஜ் மற்றும் சிறுவன் அங்கிருந்து வெளியேறிய நிலையில், மைதானத்திற்கு அருகில் இருந்த டீக்கடையில் கிர்த்தி தயாபாய் பர்மர் மட்டும் இருந்துள்ளார்.

அப்போது மாலை சுமார் 6.30 மணியளவில் குல்தீப் சிங் உள்பட உயர் பிரிவைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூர்மையான பயங்கர ஆயுதங்களுடன் வந்து கிர்த்தி தயாபாய் பர்மரை கத்தியாலும், கட்டையாலும் தாக்கியுள்ளனர். மேலும், அந்தக் கும்பலில் இருந்த நபர் ஒருவர், கிர்த்தியின் கட்டைவிரலை துண்டித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்த நிலையில் அவரை அப்படியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இந்த தாக்குதலில், தீரஜ் மீதும் தாக்குதல் நடந்ததாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அபாயகரமான ஆயுதங்களால் தாக்கியது, மிரட்டல் விடுத்தது, வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவுசெய்துள்ள காவல்துறையினர், 2 பேரை கைதுசெய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தேடி வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குல்தீப் சிங் ராஜ்புட், சித்ராஜ் சிங், ராஜூ என்கிற ராஜ்தீப் தர்பார், ஜஸ்வந்த் சிங் ராஜ்புட், ஷக்குபா லக்ஷ்மான்ஞ்ஜி, மகேந்திரசிங் என்பது காவல்துறையால் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற ஒருவர் யார் என்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.