இந்தியா

வேளாண் சட்ட விவகாரத்தில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்

வேளாண் சட்ட விவகாரத்தில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்

webteam

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், தேவைப்பட்டால் 3 வேளாண் சட்டங்களையும் அமல்படுத்த தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இவ்வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தது

வேளாண் சட்டங்களுக்கு எதிரான திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளின் மனுக்களும், விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை கோரும் மனுக்களும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் தொடக்கத்திலேயே விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாண்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எதையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசுக்கு பொறுப்பு இருந்தால் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக சொல்லுமாறு கேட்ட அவர், அவ்வாறு கூறினால் இந்த விவகாரம் பற்றி விசாரிக்க குழுவை அமைக்க உள்ளதாக சற்று காட்டமாகவே தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திட நீங்கள் முடிவெடுக்கிறீர்களா, அந்த உத்தரவை உச்சநீதிமன்றமே பிறப்பிக்கவா என அடுக்கடுக்காக தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். போராட்டம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதோடு, விவசாயிகளின் உயிரிழப்புகளும் தற்கொலைகளும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, மத்திய அரசு உடனடியாக இதை கவனிக்க வேண்டுமென கண்டிப்புடன் கூறினார்.

வயதானவர்களும் பெண்களும் ஏன் போராட்டக்களத்தில் இருக்கிறார்கள் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அவர்கள் தாமே முன்வந்து போராடுவதாகவும், யாரும் கட்டாயப் படுத்தவில்லை என்றும் விவசாயிகள் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. போராட்டத்தை கடந்த 48 நாட்களாக மிகவும் கண்ணியமாக நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமென விரும்பினால் வேளாண் சட்டங்களை செயல்படுத்துவதற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர். இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தால் தானே பேச்சுவார்த்தைக்கு வருவோருக்கும் நம்பிக்கை ஏற்படும் என தலைமை நீதிபதி வினவினார். மேலும், இந்தச் சட்டங்கள் தங்களுக்கு நன்மை பயக்கும் என ஒருவர்கூட ஏன் தங்களை நாடவில்லை என தலைமை நீதிபதி மீண்டும் சந்தேகம் எழுப்பினார். உத்தரவுகள் மூலம் எதையும் சாதித்திடலாம் என மத்திய அரசு எண்ணிவிடக் கூடாது என்று எச்சரித்த தலைமை நீதிபதி, குடிமக்கள் யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும் கூறினார். போதிய ஆலோசனை இன்றி சட்டங்களை மத்திய அரசு இயற்றியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குடியரசு தின விழாவை சீர்குலைக்க இரண்டாயிரம் டிராக்டர்களில் விவசாயிகள் வர உள்ளதாகக் கூறியுள்ள நிலையில், பேச்சுவார்த்தை எப்படி சுமூகமாக நடத்த முடியும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் வாதிட்டார். அதற்கு குடியரசு தினவிழாவை சீர்குலைப்பது தங்களது நோக்கம் அல்ல என்று கூறிய விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர், ட்ராக்டர் பேரணியை நடத்தப் போவதில்லை என தெரிவித்தார். விவசாயிகளின் இந்த முடிவை தலைமை நீதிபதி பாராட்டினார். இந்த விஷயத்தில் சுமுக தீர்வு காண உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தலைமை கூறிய தலைமை நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.