வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி விவசாயிகளின் போராட்டம் நீடித்து வரும் நிலையில் அது தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. புதிதாக கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளை இணைத்து விசாரணை நடைபெற உள்ளது.
விவசாயிகள் போராட்ட பிரச்னையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனக் கூறியிருந்த நீதிபதிகள், விவசாயிகளுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலவரம் குறித்த விவரங்களை சமர்ப்பிக்குமாறும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
விவசாயிகளுடன் அரசு ஏற்கனவே நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவுற்ற நிலையில் 9ஆவது சுற்று பேச்சு15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்போவதில்லை என்றும் இவ்விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாவும் கூறப்படுகிறது.