இந்தியா

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: இன்று முதல் இறுதி விசாரணை

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு: இன்று முதல் இறுதி விசாரணை

Rasus

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி விசாரணை நடைபெறவிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், 2.77 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியை நிர்மோகி அகாராவுக்கும், மற்றொரு பகுதி ராமர் கோவில் கட்டவும், எஞ்சிய பகுதி முஸ்லிம்களின் சன்னி வக்பு வாரியத்துக்கும் சொந்தம் என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூன்று தரப்பினரும் மேல்முறையீடு செய்திருந்தனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 10 வாரங்களுக்குள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சமர்பிக்கும்படி, உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இன்று முதல் இறுதி விசாரணை தொடங்கும் என்றும், எந்த காரணத்துக்காகவும் யாரும் விசாரணையை ஒத்திவைக்க கோரக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி இன்று முதல் இறுதி விசாரணை தொடங்கவுள்ளது.

முன்னதாக, சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் மசூதியை கட்டுவதன் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்று உத்தரப் பிரதேசத்தின் ஷியா மத்திய வக்ஃபு வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், இந்த விவகாரத்தில் ஷியா வக்ஃபு வாரியம் தலையிடுவதற்கு, சன்னி வக்ஃபு வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது.