இந்தியா

ஆறு வார விடுமுறைக்குப் பின் இன்று கூடும் உச்சநீதிமன்றம்

ஆறு வார விடுமுறைக்குப் பின் இன்று கூடும் உச்சநீதிமன்றம்

webteam

கோடை விடுமுறைக்குப் பின் உச்சநீதிமன்றம் இன்று கூடுகிறது. 

உச்சநீதிமன்றம் ஆறு வாரங்கள் கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று பணிகளை தொடங்குகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 31 நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கவுள்ளனர். ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு எனக் கூறி தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதத்தில் தள்ளுபடி செய்திருந்தது. 

இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரத்தில் சுமுக தீர்வு காண்பதற்காக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழுவின் நடவடிக்கைகள் கவனிக்கப்படும். 

இந்தக் குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை உச்சநீதிமன்றமே திருடன் எனக் குறிப்பிட்டிருப்பதாக பேசியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. 

இந்த வழக்கில் ராகுல் காந்தி ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத்தடை, தமிழக நதிகளை இணைக்கக் கோரிய வழக்குகளும் விசாரணைக்கு வரவிருக்கின்றன.