வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சு குறித்த வழக்கை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்ததை ஏற்க முடியாதென தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கை நாளையே விசாரிக்க வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வெடித்த வன்முறைகளை கட்டுப்படுத்தக்கோரி, சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் மற்றும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளுக்கு எதிரான வழக்கை, ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதுபோன்ற வழக்குகளில் விசாரணையை ஒத்திவைப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை தாமதப்படுத்துவதாகும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை நாளையே விசாரிக்க வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.