எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மார்ச் 20ம் தேதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
மத்திய அரசு இன்று காலை தாக்கல் செய்த மனு மீது பிற்பகலில் உடனடியாக விசாரணை நடைபெற்றது. அப்போது, தங்கள் உத்தரவை சரியாக படிக்காதவர்களே போராடுகிறார்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், “எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. வன்கொடுமை தடுப்பு சட்டத்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது” என்று அவர்கள் கூறினர்.
மத்திய அரசின் சீராய்வு மனு மீது 10 நாட்களுக்கு பின் விசாரணை நடைபெறும் என்று கூறிய நீதிபதிகள், அனைத்து தரப்பினரும் இரண்டு நாட்களில் மனுதாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.
எஸ்சி, எஸ்டி பிரிவினரை பாதுகாக்கும் வகையிலான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யாரேனும் ஒருவர் மீது புகார் தெரிவித்தால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, ஜாமீன் இல்லாத பிரிவின் கீழ் உடனே கைது செய்யும் வகையிலான ஷரத்தான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பு வரை இருந்தது. அந்த ஷரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 20ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அந்த உத்தரவில், தீண்டாமை சட்டத்தின் கீழ் யார் மீதேனும் புகார் கூறப்பட்டால், அதனை தீர விசாரித்து முகாந்திரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதாவது, அரசு ஊழியர் மீது புகார் அளிக்கப்பட்டால் நியமன அதிகாரியின் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய வேண்டும். அதேபோல், அரசு ஊழியர் அல்லாதவர் மீது புகார் கூறப்பட்டால், மாவட்ட காவல்துறை அதிகாரியின் அனுமதி பெற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இத்தகைய புதிய கட்டுப்பாடுகள் ஏற்கனவே உள்ள சட்டத்தை முற்றிலும் நீர்த்துப் போகச் செய்யும் என்பதுதற்காக சமூக ஆர்வலர்கள் மற்றும் தலித் அமைப்பினர் குற்றச்சாட்டி நேற்று நாடு தழுவிய பந்த்தில் ஈடுபட்டனர். நேற்றைய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பங்களில் 9 பேர் கொல்லப்பட்டனர்.